Monday, August 18, 2014

இந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது!


O.M முஸம்மில் அஹ்மது 

“ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில் வெளிவந்துள்ளது. அதில் “தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும் என எழுதியுள்ளார். ஆனால் அதற்கு எவ்விதச் சான்றையும் அவர் எடுத்து வைக்கவில்லை. 

இதை விட வேடிக்கையானது என்னவெனில். 1994-ஆம் ஆண்டு கோவையில் P.J யுடன் விவாதம் நடத்தியபோது பிற முஸ்லிம்களைப் போன்றே அப்போது JAQH எனும் பெயரில் இயங்கிய இவர்களும் ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்குவதாகத்தானே நம்புகிறார்கள் என நாம் கருதி, ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கே செல்லவில்லை என்ற கருத்தை எடுத்துக் கூறியபோது அதை P.J மறுத்தவாறு, வானம், வானம் என நீங்கள் கூறுகிறீர்கள் நாங்கள் அந்த வார்த்தையைக் கூறவே இல்லை என பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். 

1994-ஆம் ஆண்டு விவாதத்தில் வானம் என்ற வார்த்தையை பகிரங்கமாக மறுத்த P.J ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம் 53 இல் ‘ஈஸா நபி வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என முரண்பட்டு எழுதியிருக்கிறார். இவ்வாறு முரண்படுவது அவரது வாடிக்கையும் அதைக் கண்டு நாம் வேடிக்கை காண்பதும் புதுமையானது ஒன்றல்ல. ஆயினும் நடுநிலையுடன் சிந்திப்பவர்களுக்கு நாம் ஒன்றை கூறிக்கொள்வோம்: ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கு சென்றதாக எந்த ஒரு ஹதீஸிலும் வராதபோது, அவர் வானத்திலிருந்து இறங்குவார் என நேரடிப் பொருளில் எப்படிக் கூறுகின்றீர்கள் என நாம் ஆலிம்களிடம் வினா கொடுத்த பிறகுதான் அவர்கள் தம் அறியாமையை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளாயினர். இதில் P.J யும் அடங்குவார். எனவேதான், கோவை விவாதத்தில் கூட ஈஸா நபி வானில் உயிருடன் இருக்கிறார் என்பதை அவரால் நிரூபிக்க முடியாமற்போனது மட்டுமின்றி, ‘வானம்’ என்ற வார்த்தையை பகிரங்கமாக வாபஸ் வாங்கும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார். 

ஆனால் இப்போது அதே P.J ஈஸா நபி வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்ற முரண்பட்ட ஒரு செய்தியை ஏகத்துவ இதழில் எவ்வித ஆதாரமுமின்றி எழுதியுள்ளார். 

எந்த ஒரு சஹீஹான ஹதீஸிலும் ஈஸா(அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வருவார் என வரவில்லை! ஒரு வாதத்திற்காக நேரடியாக வானத்திலிருந்து இறங்கி வருதல் என பொருள் கொள்ளமுடியாது. ஏனெனில், இறங்குதல், இறக்குதல் என்ற இதே சொல்லை இறைவன் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறான். அங்கே P.J உட்பட எவரும் நேரடியாக, வானிலிருந்து இறங்குதல், இறக்குதல் என்ற பொருளைக் கொடுக்கவில்லை. உதாரணமாக, 

கத் அன்ஸலல்லாஹு இலைக்கும் திக்ரன் ரஸுலன். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவூட்டக் கூடிய இறைத்தூதரை இறக்கியுள்ளான். (65:11) 

இங்கு அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி ‘அல்லாஹ் இறக்கியுள்ளான்’ என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளான். ஆனால் அன்னார் (ஸல்) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வந்தார்களா? இல்லையே! மாறாக, P.J உட்பட இந்த வசனத்திற்கு ‘அல்லாஹ்வின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதரை அனுப்பியுள்ளான் என்றே மொழி பெயர்த்துள்ளார். (P.J மொழியாக்கம் வசனம் 65:11 பக்கம்,826 காண்க ) 

2. வ அன்ஸல லக்கும் மினல் அன் ஆமி ஸமானியத்த அஸ்வாஜ். அவன் கால்நடைகளுள் எட்டு இணைகளை உங்களுக்கு இறக்கியுள்ளான். (39:7) இந்த வசனத்தில் அன்ஸல (இறக்கினான்) என்ற சொல் வந்தபோதிலும் கால்நடைகளை வானத்திலிருந்து இறங்கியதாக யாரும் பொருள் கொடுப்பதில்லை!

3. வ அன்ஸல்னல் ஹதீத. நாம் இரும்பை இறக்கியுள்ளோம். (57:26) 

இங்கேயும் P.J இரும்பு வானத்திலிருந்து இறங்குவதில்லை என்பதை அறிந்து ‘இரும்பையும் அருளினோம்’ என உஷாராக மொழிபெயர்த்துள்ளார். (P.J. மொழியாக்கம் பக்கம் 799 காண்க). இங்கு உஷாராக இருக்கும் அவர் இதே சொல் ஈஸா (அலை) அவர்களுக்காக வரும்போது மட்டும் நேரடிப்பொருளைத்தான் கொடுக்க வேண்டும் என கராராக இருக்கிறார்!

4. கத் அன்ஸல்னா அலைக்கும் லிபாஸன் என அல்லாஹ் கூறுகிறான். அதாவது நாம் உங்களுக்கு ஆடையை இறக்கினோம் என்பது இதன் நேரடிப் பொருளாகும். ஆனால் ஆடையை உங்களுக்கு ‘அருளினோம்’ என P.J தமிழாக்கம் செய்துள்ளார். (வசனம் 7:26 பக்கம் 242) 

ஆக, திருக்குர்ஆனில் அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் கால்நடைகளைப் பற்றியும், இரும்பைப் பற்றியும், ஆடையைப் பற்றியும் ‘இறக்கினோம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். அவ்வனைத்து இடங்களிலும் எல்லா முஸ்லிம்களும் அஹ்மதி முஸ்லிம்களைப் போன்றே வழங்குதல், அனுப்புதல், அருளுதல் என்ற பொருளையே கொடுத்துள்ளனர். இதில் நமக்கும் பிற முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அப்படியிருக்கும்போது, இதே சொல் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுக்காக வரும்போது மட்டும் வானத்திலிருந்து இறங்குவார் என்று நேரடியான பொருளைத்தான் கொடுக்க வேண்டும் என அடம்பிடிக்கின்றனர். இதிலிருந்து இவர்கள் நுஸுல் (இறங்குதல்) என்பதன் உண்மையான பொருளைப் புரிந்து கொண்டே ஈஸா நபி விஷயத்தில் மட்டும் சொந்த கைச்சரக்கைத் திணிக்கப் பார்க்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 

ஹதீஸில் ஈஸாவைப் பற்றி நஸல (இறங்குவார்) என்ற சொல் தானே வருகிறது என்ற ஐயத்திற்கு மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களிலேயே நமக்கு தெளிவு கிடைத்துவிட்டது. எனினும் ஹதீஸிலும் இதே சொல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான இரு உதாரணங்களை கீழே தருகின்றோம்: 

1. அன்னன் நபிய்ய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம நஸல தஹ்த்த ஷஜரத்தன். அதாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஒரு மரத்தடியில் இறங்கினார்கள். (கன்ஸுல் உம்மால் தொகுதி 7 பக்கம் 59) 

2. கான இஸா நஸல மன்ஸிலன் பீ ஸபரின் லம் யர்த்தஹில் ஹத்தா யுஸல்லீ பீஹீ ரக்அதைனி, அதாவது, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தங்கிய பிறகு இரண்டு ரக்ஆத் தொழுதுவிட்டு பயணம் மேற்கொள்வார்கள். (கன்ஸுல் உம்மால் தொகுதி 4 பக்கம் 19) 

ஹதீஸில் ஈஸாவுக்கு வந்துள்ள நுஸுல் என்ற சொல்தான் இந்த ஹதீஸுகளில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகவும் வந்துள்ளது. இங்கெல்லாம் முஸ்லிம்களில் எந்தப் பிரிவினரும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் வானிலிருந்து இறங்கினார்கள் எனப் பொருள் கொடுப்பதில்லை. இதே சொல் வழக்கு ஈஸா நபிக்காக வரும்போது மட்டும் அதற்கு நேரடிப் பொருள்தான் கொடுக்க ஆலிம்கள் துடிப்பதைக் காணும்போதுதான் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிக நேசம் கொண்டுள்ள நாம் துடிதுடித்துப் போகிறோம். 

‘இப்னு மர்யம் உங்களிடத்தில் இறங்கும்போது’ என ஹதீஸில் வந்துள்ளதென்றால் அதே மாதிரிதான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இறக்கினோம் என அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். ஈசாவுக்கு நேரடிப் பொருள் கொடுக்க வேண்டும் என அடம்பிடிப்பவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கும் அதே பொருளைத் தர வேண்டும். தருவார்களா? தந்ததில்லை: தருவதுமில்லை: தரவும் மாட்டார்கள். அப்படியானால் ஈஸாவுக்கு வரும்போது மட்டும் நேரடிப் பருளைத் தர முற்படுவது நியாயமானதல்ல என்பதை ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீது அன்பு கொண்டவர்களால் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமானதல்ல. இவர்களின் இச்செயல் ‘உண்மையிலேயே இது முறையற்ற பங்கீடாகும்’ (53:23) என்ற இறை வசனத்தையே நமக்கு நினைவூட்டுகிறது!

அடுத்து, ஈஸா நபியவர்கள் இறுதிக் காலத்தில் வரும்போது இறை தூதராக வர மாட்டார். எனவும் P.J குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம் 64) 

இதுவும் அப்பட்டமான பொய்யும், இட்டுக்கட்டும் ஆகும், இறை தூதராக வர மாட்டார் எனப் பொருள்படும் ஹதீஸின் அரபிச் சொல்லை இதுவரை எந்த ஆலிமும் எடுத்துக் காட்டவில்லை. P.J க்கும் நாம் சவாலாக விடுக்கிறோம். ‘இறை தூதராக வரமாட்டார்’ என நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸ் எதில் இடம் பெற்றிருக்கிறது? அதன் அரபி வாசகம் என்ன? என்பதைக் காட்டத் தயாரா? இவர்களால் காட்டமுடியாது என்பதற்கு கடந்த காலமே சான்று. 

ஆனால் நடுநிலையாக சிந்திக்கும் வாசகர்களுக்கு நாம் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்: இந்த ஆலிம்கள் கூறுவதற்கு நேர்மாறாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தோன்றவிருக்கும் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி, நபியுல்லாஹி ஈஸா (அல்லாஹ்வின் நபியாகிய ஈஸா) என ஒரு முறை அல்ல: நான்கு முறை குறிப்பிட்டுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் பாகம் 4 பக்கம் 878-882 ஹதீஸ் எண்: 5629காண்க) இந்த ஹதீஸை P.J யும் ஸஹீஹானது என ஒப்புக்கொண்டவாறு தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம்55) 

ஆனால் அதற்கு முரண்பட்டவாறு ‘நபியாக வர மாட்டார்’ என ஏகத்துவம் பக்கம் 54 இல் எழுதியிருக்கிறார். இதிலிருந்து அவர் குழம்பிப் போயிருக்கிறார்: ஒரு நிலைப்பாட்டில் இல்லை. அல்லது தெரிந்து கொண்ட மக்களைக் குழப்ப முயற்சிக்கிறார் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் நபியாகிய ஈஸா எனக் கூறிவிட்ட பிறகு இதில் இரண்டாம் கருத்து கொள்வதற்கோ, இரண்டாம் கருத்து கொடுப்பதற்கோ இங்கு இடமேயில்லை. 

அது மட்டுமின்றி, ஈஸா நபிக்கு அல்லாஹ் வஹி அறிவிப்பான் என்ற ஸஹீஹ் முஸ்லிமில் வருகின்ற நபிமொழியையும் P.J குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் பக்கம் 55) 

வஹி அறிவிப்பான் என்ற அரபிச் சொல்லைத்தான் P.J ‘அல்லாஹ் செய்தி அனுப்புவான்’ என மொழிபெயர்த்துள்ளார். ஆக, இந்த நபிமொழியிலிருந்து வஹி வருவது நின்று விட்டது என்ற முஸ்லிம்களின் தவறான நம்பிக்கையும் அடிபட்டுப் போகின்றது. இந்த உம்மத்தில் தோன்றும் ஈஸாவுக்கு அல்லாஹ் வஹி அறிவிப்பான் என மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கிக் கொள்கிறோம். 

அடுத்து, ஈஸப்னு மர்யம் முஸ்லிம் உம்மத்தில் தோன்றுவார் எனும் பொருள் பட ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு இவ்வாறு கூறியிருக்கிறார்கள்: 

கய்ப அன்த்தும் இஸா நஸலப்னு மர்யம் பீக்கும் வ இமாமுக்கும் மின்க்கும். அதாவது (முஸ்லிம்களே!) இப்னு மர்யம் உங்கள் மத்தியில் தோன்றும் போது உங்கள் நிலை எவ்வாறு இருக்கும்? மேலும் அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார். (புகாரி பாகம் 4 பக்கம் 145 ஹதீஸ் எண்: 3449) 

இந்த நபிமொழிக்கு P.J. இவ்வாறு தவறான பொருள் கொடுக்க முனைந்துள்ளார்: 

“உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும்போது, ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஏகத்துவம் பக்கம் 54) 

இந்த நபிமொழியில் இரண்டு வாக்கியங்கள் அமைந்துள்ளன. ஒன்று கய்ப அன்த்தும் இஸா நஸலப்னு மர்யம் பீக்கும் என்பது. அடுத்து வாவு (மேலும்) வந்துள்ளது. பிறகும் இமாமுக்கும் மின்கும் என வந்துள்ளது. 

அரபி மொழியில் வாவு மூன்று வகையில் பயன்படுத்தப்படுகின்றது: 1. வாவு அத்ப் (மேலும் என்ற பொருளில்) 2. வாவு கஸ்மிய்யா (சத்தியமாக என்ற பொருளில்) 3. வாவு ஹாலிய்யா (நிலையை விளக்குவதற்கு வருவது.) 

இங்கே P.J நிலையை விளக்குவதற்காக வந்த ‘வாவு’ என தவறான பொருளைக் கொடுக்க முனைத்துள்ளார். எனவே. ஈஸா நபி வேறு; இமாம் வேறு என்று அவர் தவறாக புரிந்து வைத்துள்ளதற்கேற்ப, உங்கள் இமாம் உங்களை சார்ந்தவராக இருக்கும்போது (இருக்கும் நிலையில்) ஈஸா மேலிருந்து இறங்கி வருவார் என தவறாகப் பொருள் கொடுத்துள்ளார். அதாவது இமாம் மஹ்தி உங்கள் மத்தியில் இருக்கும்போது, ஈஸா வானிலிருந்து இறங்குவார் என்ற தவறான பொருளைக் கொடுத்துள்ளார். ஆனால் இங்கு வந்துள்ள ‘வாவு’ அத்ப் எனும் வாவாகத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி (முஸ்லிம்களே!) இப்னு மர்யம் உங்கள் மத்தியில் தோன்றும் போது உங்களின் நிலை எவ்வாறு இருக்கும்? மேலும் அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார் என்றே பொருள்படும். அதாவது இந்த உம்மத்தில் தோன்றும் இப்னு மர்யமும், இமாமும் ஒருவர்தான்; இரு வேறுபட்டவர்கள் அல்ல என்பதை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். 

இதனை நாம் அனுமானமாகக் கூறவில்லை. ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஹதீஸ் நமது கருத்துக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது. அதில் இவ்வாறு வருகின்றது:

கய்ப அன்த்தும் இஸா நஸல பீக்குமுப்னு மர்யம் பஅம்மக்கும் மின்க்கும். பொருள்: (முஸ்லிம்களே!) உங்களுக்கு மத்தியில் ஈசப்னு மர்யம் தோன்றும் போது உங்களின் நிலை எப்படி இருக்கும்? அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமத் செய்வார் என ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம்:185 ஹதீஸ் எண்:246) 

இங்கு நஸல (தோன்றும்போது) என்ற வினைச் சொல்லையும், அம்ம (இமாமத் செய்வார்) என்ற வினைச்சொல்லையும் ஒரே எழுவாயுடன் சேர்த்து ஹசரத் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அது ஈஸப்னு மர்யம் என்பதுதான், எனவே முஸ்லிம்களே! உங்களிலிருந்து தோன்றும் ஈஸப்னு மர்யம்தான் இமாமாக இருப்பார் என்ற கருத்து நமது சுய கருத்து அல்ல. மாறாக, இது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு விளக்கித் தந்த கருத்தாகும்!

இந்தக் கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கீழ் வரும் நபிமொழியும் இருக்கின்றது: 

“உங்களில் எவர் உயிருடன் இருப்பாரோ அவர் ஈசப்னு மர்யமை இமாம் மஹ்தியாகவும், தீர்ப்பளிப்பவராகவும், நீதி வழங்குபவராகவும் சந்திப்பார்.” (முஸ்னத் அஹ்மதிப்னு ஹம்பல் தொகுதி 2 பக்கம் 411) 

இந்த ஹதீஸில் இன்பு மர்யம்தான் இமாம் மஹ்தி (நேர்வழி காட்டப்பட்ட மஹ்தி) ஆகவும், ஹகம் (தீர்ப்பளிப்பவர்) ஆகவும், அத்ல்(நீதி வழங்குபவர்) ஆகவும் இருப்பார் என்பதை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கி விட்டார்கள். 

ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள இதே கருத்தை தெளிவு படுத்தியவாறு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகவும், இமாம் மஹ்தி ஆகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கீழ் வருமாறு கூறுகின்றார்கள்: 

“வரக் கூடிய இந்த (ஈஸா) மஸீஹ் என்பது உண்மையிலேயே முன்னர் வந்த அதே மஸீஹ் ஆகவே இருப்பார் என இமாம் முஹம்மது இஸ்மாயீல் புகாரி அவர்கள் சைகையாகக் கூட கூறவில்லை! இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு ஹதீஸுகளை எடுத்து எழுதியுள்ளார்கள். அவை முதல் மஸீஹ் வேறு: இரண்டாவது மஸீஹ் வேறு எனத் தீர்ப்பளித்து விட்டன. ஏனெனில், ஒரு ஹதீஸின் கருத்து, இப்னு மர்யம் உங்களிலிருந்து தோன்றுவார் என்பதாகும். மேலும் தெளிவுபடுத்தியவாறு, ‘அவர் உங்களிலிருந்து தோன்றும் உங்களின் ஓர் இமாம் ஆக இருப்பார்’ என விளக்கிக் கூறியவாறு தெளிவு படுத்திவிட்டார்கள்........

ஆக, மர்யமின் மகன் என்ற சொல்லினால் மனதில் தோன்றுவதற்கு சாத்தியமாக இருந்த கருத்தை நீக்குவதற்காக இந்த சொற்களுக்குப் பிறகு, ‘உண்மையிலேயே மர்யமின் மகன் எனக் கருதிக் கொள்ளாதீர்கள்; பல் ஹுவ இமாமுக்கும் மின்க்கும் (மாறாக, அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார்)’ என விளக்கவுரையாகக் குறிப்பிட்டுவிட்டார்கள்.” (இஸாலே அவ்ஹாம், ரூஹானி கஸாயின் தொகுதி 3பக்கம்: 124) 

தொடர்ந்து கூறுகிறார்கள்: 

“மேலும் இரண்டு ஈசாவும் வெவ்வேறானவர்கள் எனபதைத் தீர்மானிக்கும் இன்னொரு ஹதீஸ், முதல் மஸீஹின் உருவ அடையாளங்களை வேறு வகையிலும், இரண்டாம் மஸீஹின் உருவ அடையாளங்களை வேறு வகையிலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.” (இஸாலே அவ்ஹாம் ரூஹானி கஸாயின் தொகுதி 3 பக்கம் 124) 

ஆம்! ஹதீஸில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இரு வேறுபட்ட ஈசாவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஆலிம்கள் மறைத்து விடுகின்றனர். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களின் சமுதாயத்தில் தோன்றிய ஈசா (அலை) அவர்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்: 

“நான் ஈஸா (அலை), மூஸா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டேன். ஈஸா (அலை) அவர்கள் சிவந்த நிறமுடையவர்களாகவும், சுருண்ட முடியுடையவர்களாகவும், அகன்ற நெஞ்சுடையவர்களாகவும் இருந்தார்கள். மூஸா(அலை) அவர்களோ கோதுமை நிறமும், பருமனான உடலும், நீளமான தலை முடியுடையவர்களாகவும் இருந்தார்கள்.” (புகாரி பாகம் 2 பக்கம் 1375-புதிய பதிப்பு ஹதீஸ் எண்:3438) 

இந்த ஹதீஸில் மூஸா (அலை) அவர்களுடன் ஈசா (அலை) அவர்களைப் பற்றி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் கூறியதிலிருந்து அது இஸ்ரவேல் மக்கள் மத்தியில் தோன்றிய ஈஸா(அலை) அவர்களின் அங்க அடையாளங்கள் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் பிற்காலத்தில் இந்த உம்மத்தில் தொன்றவிருந்த ஈஸப்னு மர்யமின் அங்க அடையாளங்களைப் பற்றிக் கூறும்போது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு வேறுபடுத்திக் கூறியிருக்கிறார்கள். 

ஒருமுறை நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது கனவில் காபாவை வளம் வருவதாகக் கண்டேன். அப்போது ஒருவர் தோன்றினார். அவர் கோதுமை நிறமும், நீளமான தலை முடியுடையவராகவும் இருந்தார்...........இவர் யார்? என நான் கேட்டபோது, இவர் இப்னு மர்யம் எனக் கூறப்பட்டது. (புஹாரி கிதாபுல் பிதன் பாகம் 2 பக்கம் 1376 புதிய பதிப்பு ஹதீஸ் எண் 3440 மற்றும் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 210 ஹதீஸ் எண்:277) 

இரண்டு மஸீஹுகளை வெவ்வேறான உருவத்திலேயே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆக, பெயர் ஒன்றாக இருந்தாலும் அவ்விருவரும் வெவ்வேறானவர்கள் என்பதை இதன் மூலம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு உணர்த்தி விட்டார்கள். 

முதலில் கூறப்பட்ட ஹதீஸில் ஈஸா நபியை மூஸா நபியுடன் சேர்த்துக் கூறப்பட்டுள்ளதிலிருந்து அவர் மூஸா வின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவதாகக் கூறப்பட்ட ஹதீஸில் தஜ்ஜாலின் குழப்பம் மிகுந்த காலத்தில் தோன்றுவதாகக் கூறப்பட்டதிலிருந்து அவர் பிற்காலத்தில் இந்த உம்மத்தில் தோன்றும் மஸீஹ் என்பதையும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் குறிப்பால் உணர்த்திவிட்டார்கள். 

அடுத்து ஈஸா(அலை) அவர்களின் பணிகளைப் பற்றி புகாரி 2476, 3448, 3449 ஆகிய நபிமொழிகளில் வருகின்ற முன்னறிவிப்புகளுக்கும் வழக்கம் போல் எல்லா மௌலவிகளும் பொருள் கொடுப்பதைப் போன்றே பி.ஜே யும் பொருள் கொடுத்து தமது அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.! உதாரணமாக, அவர் சிலுவையை முறிப்பார்: பன்றியைக் கொள்வார்: ஜிஸ்யா வரியை நீக்குவார்: வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும் என்ற ஹதீஸைக் குறிப்பிட்டு இவற்றிற்கெல்லாம் நேரடியான பொருளை கொடுத்துள்ளார். 

இவ்வாறு நேரடி பொருள் கொடுத்தல் இந்த ஹதீஸுகள் அனைத்தும் அனர்த்தமாகிவிடும். மார்க்கத்தில் எவ்வித பலவந்தமும் இல்லை என்ற வசனம் திருக்குர்ஆனில் இருக்கும்போது அவர் எப்படி சிலுவையை முறிப்பர்? அது பலவந்தமாகாதா? அப்படியே அவர் சிலுவைகளை முறிக்கும் பணியில் அவர் ஈடுபட்டாலும் கிறிஸ்தவர்களால் மீண்டும் சிலுவைகளை உருவாக்கிக் கொள்ள முடியாதா என்ன? அவ்வாறே பன்றிகளைக் கொல்லுதல் என்பது ஒரு நபியின் கண்ணியத்திற்கு இணக்கமான செயலா என்ன? உலகத்திலுள்ள பன்றிகளை கொல்வதற்கே அவருக்கு நேரம் போதாத போது பிற மார்க்கப் பணிகளை செய்ய அவருக்கு எங்கிருந்து நேரம் இருக்கும்? ஆதமின் மகனின் பேராசையைப் பற்றிக் குறிப்பிட்ட நபி (ஸல்) அவர்கள், மனிதனின் பேராசையை மண்ணறையின் மண்தான் நிறைவேற்ற முடியும் எனக் கூறியிருக்கும் போது ‘வரவிருக்கும் மஸீஹ் செல்வத்தை வாரி வழங்குவார்; அதனை எவரும் வாங்க மாட்டார்’ என்ற இந்த ஹதீஸ் அதற்கு முரண்படுகிறதே? இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது இதற்கு நேரடியானப் பொருள் கொள்ள முடியாது; இவை உவமையாகக் கூறப்பட்டவை என்பதை சாதாரண முஸ்லிமாலும் புரிந்து கொள்ள முடியும். இதற்கு விளக்கமளித்தவாறு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகிறார்கள்: 

“இரண்டாவது சிறப்பு அடையாளம் என்னவெனில், வாக்களிக்கப்பட்ட மஸீஹ் வரும் போது சிலுவையை முறிப்பார்: பன்றியைக் கொல்வார். ஒற்றைக் கண் தஜ்ஜாலைக் கொல்வார்; எந்த காபிர் வரை அவருடைய மூச்சுக் காற்று சென்றடையுமோ அவர் உடனே மரணித்துவிடுவார் என்பதாகும். எனவே இந்த அடையாளத்திற்கு ஆன்மீகமாகக் கொள்ளப்பட்ட உண்மையான கருத்து என்னவென்றால், மஸீஹ் உலகில் வந்து சிலுவை மதத்தின் மதிப்பையும், கண்ணியத்தையும் தமது கால்களில் கீழ் போட்டு நசுக்கிவிடுவர். மேலும் எவர்களிடம் பன்றியின் வெட்கம்கெட்ட தன்மையும், அசுத்தத்தைத் தின்னும் பழக்கமும் இருக்கிறதோ அவர்களின் மீது மிகக் கூர்மையான சான்றுகள் எனும் வாள்களை பயன்படுத்தி அவர்கள் அனைவரின் வேலைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவார்.”(இஸாலே அவ்ஹாம் ரூஹானி கஸாயின் தொகுதி 3 பக்கம் 142)

No comments:

Post a Comment