அசன் அபூபக்கர்
இதோ வருகிறார்; அதோ வருகிறார் என்று இயேசுவின் அன்பர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தொடர்ந்து கட்டியம் கூறிக் கொண்டிருப்பதை நாம் நன்கறிவோம். இன்று நேற்றல்ல; பல காலமாகவே இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வருவதை காண கிறிஸ்தவ உலகு மிகுந்த ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் காத்துக்கிடப்பது நமக்குத் தெரியும்.
இதே போன்றுதான் இயேசுவின் காலத்தில் யூத சமுதாயம், வானத்திலிருந்து இறங்கி வருகின்ற ஒருவருக்காக ஆவலோடு காத்திருந்தது: அவர்தான் மெசியா, வானத்திலிருந்து இறங்கி வந்து. பூமியில் தோன்றும் இந்த மெசியாதான் தங்களை ரோமானிய அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பார் என்றும், தங்களுக்கு ஒரு சுதந்திர நல்வாழ்வை வழங்குவார் என்றும் அவர்கள், காலங்காலமாக நம்பி வந்தனர். மேசிய என்ற சொல்லின் கிரேக்க மொழி வடிவம்தான் கிறிஸ்து ஆகும். ஆகவே அன்றைய யூத சமுதாய மக்கள் கிறிஸ்து என்ற ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வரக் காத்திருந்தார்கள் எனச் சுருங்கக் கூறலாம்.
இப்போது நாம் அவர்களின் மற்றொரு நம்பிக்கையையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். முன்னொரு காலத்தில் எலியா தீர்க்கதரிசி என்பவர் உயிருடன் வானத்திற்கு ஏறிச் சென்றுள்ளார்கள் என்பதும் அவர் மீண்டும் அதே உடலோடும் உயிரோடும் இப்பூவுலகிற்குத் திரும்பி வருவார் என்பதும் அந்த யூத மக்களின் நம்பிக்கையாகும். மேசியா என்ற கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி தங்களுக்கு மத்தியில் வந்து தோன்றுவதற்கு முன்னர், ஏற்கனவே வானத்திற்கு ஏறிச் சென்றிருந்த அதே எலியா தீர்க்கதரிசி அங்கிருந்து இறங்கி வந்து மேசியாவுக்காக அவரது வழியை ஆயத்தப் படுத்துவார் என்றும் யூத கோத்திரத்தினர் நம்பி வந்தனர்.
‘எலியா வருவார்’ என்ற தமது நீண்ட கால நம்பிக்கைக்கு ஆதாரமாக அவர்கள், பைபிள் பழைய ஏற்பாட்டில் உள்ள மல்கியா என்ற புத்தகத்தையே சுட்டிக்காட்டினார்கள். மல்கியாவில் எலியா தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
“இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.” (மல்கியா 4:5)
இந்த எலியா, மேசியா தோன்றுவதற்கு முன்னர் வானத்திலிருந்து உயிருடன் இப்பூமிக்கு வந்து அதாவது பாலஸ்தீனத்துக்கு வந்து மேசியாவின் வருகைக்கான பாதையை ஆயத்தப் படுத்துவார் என்றும் அக்கால யூத மக்கள் நம்பி இருந்தனர்.
எனவே இயேசு பிரான் பாலஸ்தீனத்தில் அவதரித்து யூத மக்களுக்கு மத்தியில் போதித்து வந்த வேலையில் அவரை நோக்கி, நீர் கிறிஸ்து என்பது உண்மையானால் எலியா தீர்க்கதரிசி உமக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டுமே..... அவர் எங்கே? என்று அவர்கள் தமது நியாயமான உண்மையான ஐயப்பாட்டை அவர் முன் எடுத்து வைத்தனர்.
அதற்கு மறுமொழியாக இயேசு கூறிய பதில் அறிய ஆவலாக உள்ளவர்களுக்கு மத்தேயு சுவிசேஷகர் என்ன கூறியுள்ளார் என்பதை இங்கு பார்ப்போம்:
‘நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான் கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்.’ (மத்தேயு 11:14-15) என்று அவர்களுக்கு மத்தியில் யோர்தான் நதிக்கரையில் ஞானஸ்நானம் வழங்கி வந்த யோவானைச் சுட்டிக் காட்டி நீங்கள் எதிர்பார்த்திருக்கும் எலியா ‘இவன்தான்’ என அடையாளம் காட்டினார்.
மேலும். ‘........... அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வர வேண்டும் என்று வேதபாரகர் சொல்கிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள், இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான் ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவானைக் குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீசர்கள் அப்பொழுது அறிந்து கொண்டனர்." (மத்தேயு 17:10) என்று இயேசு பிரான் சொல்லிக் காட்டியதன் மூலம் எலியா தமக்கு ‘முந்தி வந்து’ தோன்றிவிட்டார் என்பதையும் அவர் தமக்காகச் செய்ய வேண்டிய ‘எல்லாவற்றையும்’ சீர்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் அப்பாமார யூதர்களுக்கு புரிய வைத்தார். இயேசு கிறிஸ்து தமது வாயால் தந்துள்ள இந்த விளக்கத்திலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் மறுஅவதாரம் அல்லது அவரது இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற இன்னொருவரின் வருகைதானே தவிர அவரே மீண்டும் வருவதல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது
மற்றொரு நிகழ்வு மூலமும் ஒரு தீர்க்கதரிசியில் இரண்டாவது வருகை என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். சகரியா தீர்க்கதரிசிக்கு யோவான் என்ற ஒரு மகன் பிறப்பான் என்னும் அறிவிப்பு தேவதூதன் மூலம் அவருக்கு அருளப்பட்டிருந்தது அந்த அருள்வாக்கிலிருந்து எலியா தீர்க்கதரிசியின் இரண்டாவது வருகை என்பது அதே எலியா தோன்றுவார் என்பதல்ல மாறாக யோவான் (ஞானஸ்நானன்) தோன்றியதால் நிறைவேறிவிட்டது என்பதை கீழ்க்கண்ட திருவசனங்கள் தெரிவிக்கின்றன.
கர்த்தருடைய தூதன் சகரியாவை நோக்கி, ‘............உன் மனைவியாகிய எலிசபத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக........’ அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்..........’ என்று தீக்கதரிசனம் உரைத்தான். (லூக்கா 1:13-17) அதாவது சகரிய தீர்க்கதரிசிக்கு ஒரு மகன் பிறப்பான்; அந்த மகன் எலியா தீர்க்கதரிசியின் ஆவியும் பலமும் கொண்டவனாக இயேசுவுக்கு முன்னர் தோன்றுவான் என்பதையே இத்திரு வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எலியா தீர்க்க தரிசியின் இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற வேறொருவரால் அதாவது யோவான் (ஞானஸ்நானன்) இவ்வுலகில் தோன்றியதால் நிறைவேறிவிட்டது.
மேற்கொண்ட பைபிள் திருவசனங்களிலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை என்றால் அதே பழைய தீர்க்கதரிசி இரண்டாவது தோன்றமாட்டார் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். மாறாக முன்னர் சென்ற அதே தீர்க்கதரிசியின் பண்புகலோடும் தத்துவத்தோடும் புதிதாக வேறொரு தீக்கதரிசி தோன்றுவார் என்றுமே நம் பொருள் கொள்ள வேண்டும் என்பதை மேற்சொன்ன திருவசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே யூத மக்களுக்கு மத்தியில் ஏற்கனவே தோன்றி நற்போதனை செய்து மறைந்த இயேசு பெருமானின் இரண்டாவது வருகையும் இப்படித்தான் நிகழ வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதாவது இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட இயேசு பிரான் மீண்டும் இரண்டாவதாக இபூமிக்கு வருவாரென்றால், அதே பழைய இயேசு வரமாட்டார்; அவரது பண்புகளோடும், தத்துவத்தோடும் அவரைப் போன்ற வேறு ஒருவர் தோன்றுவார் என்பதுதான் அதற்குப் பொருளாகும்.
இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற ஒருவர் அல்லது இறந்து போன ஒரு மனிதன் மீண்டும் இவ்வுலகிற்கு வரமுடியாது என்பது இயற்கைச் சட்டமாகும். அதுவே இறைவன் வகுத்த விதியுமாகும். உண்மையிலேயே கிறிஸ்துவாகிய இயேசு சிலுவையில் உயிர் துறந்துவிட்டார் என்றால் அல்லது இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு ஏறிச் சென்றுவிட்டார் என்றால் அவர் மீண்டும் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பி வர முடியாது என்பது எவராலும் மீற முடியாத ஒரு விதியாகும். அவ்வாறாயின் இயேசு பிரான் மீண்டும் இரண்டாவது இவ்வுலகிற்கு வருவார் என்று கூறும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் உண்மையான பொருள்தான் என்ன? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அந்தக் கேள்விக்கும் விடை இருக்கிறது.
இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு சென்ற தீர்க்கதரிசி ஒருவர், உயிரோடு வானத்திற்குச் சென்ற பின்னர், மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்ப வருவாரென்றால் இதைக் குறித்து பைபிளின் தீர்க்கதரிசனங்கள் என்ன கூறுகின்றன? என்பதை நாம் முதலில் கண்டறிய வேண்டும். அதன் பின்னர் அத்தீர்க்கதரிசனங்கள் எந்த வேதாகமத்தில் என்ன பொருள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். அத்துடன் இவற்றைப் போன்ற முந்தைய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறி உள்ளன என்பதையும் நாம் கண்டறிய வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் இயேசுவின் இரண்டாவது வரோகையைப் பற்றி தீர்க்கதரிசனத்தின் பொருளையும், அது எவ்வாறு நிறைவேறும் என்பதையும், பைபிள் அடிப்படையில் நாம் அறிந்து கொள்ளலாம்.
இவ்விடத்தில் நம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான மற்றொரு கருத்து உள்ளது அதாவது இயேசு பிரான் தம்மை எதிர்த்துக் கொடுமைகளுக்குள்ளாக்கிய யூதர்களை நோக்கி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதன்படி தேவனின் இராஜ்ஜியம் கொடிய உள்ளங்கொண்ட அந்த யூத சமுதாயாத்தை விட்டு நீக்கப்பட்டு வேறொரு சமுதாய மக்களிடம் வழங்கப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறைவனின் திட்டப்படி யூத மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த ‘தீர்க்கதரிசி’ என்ற இறையருள் (நபித்துவம்) இனி அந்த யூத கோத்திரத்தார்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அதற்குத் தகுதியான வேறொரு சமுதாயத்தாருக்கு வழங்கப்பட்டுவிடும். ஆகவே இயேசுவுக்குப் பிறகு யூத சமுதாயத்தில் தீர்க்கதரிசிகள் (நபிமார்கள்) தோன்றமாட்டார்கள். இதுவே இயேசு பிரான் விடுத்த எச்சரிக்கையின் நுட்பமான கருத்தாகும்.
No comments:
Post a Comment